புதுப்பொலிவுடன் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம்: ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்
Sunday, March 25, 2012
சென்னை, மார்ச் 24: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) இணையதளத்தை புதிய பொலிவுடன் கொண்டு வருவதற்கான இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மருந்துகள் ஆய்வாளர் உள்பட மூன்று பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சுயாட்சி பெற்ற ஆணையமான அது, 1929-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இணையதளம்: ஒவ்வொரு மாநிலத்திலும் அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக பணியாளர் தேர்வாணையங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தமக்கென தனியாக இணையதளத்தை வைத்துள்ளன. அந்த இணையதளங்கள் ஏதாவது ஒரு வகையில் தேர்வர்களுக்கு பயனுள்ள வகையில் இருந்து வருகின்றன.
ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் எந்தவொரு தகவலும் இல்லாமல் காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது. இப்போது, இதை மாற்றும் முயற்சியில் தேர்வாணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
முதல் கட்டமாக, இணையதளத்தில் தேர்வுகளுக்கான விடைகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, ஆன்-லைன் மூலமாகவே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மருந்துகள் ஆய்வாளர் உள்பட மூன்று தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வசதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) செய்யப்பட்டுள்ளது.
தமிழில் ஆன்-லைன் விண்ணப்பம்:
பொதுவாக, மத்திய அரசு அல்லது பிற அரசுத் துறைகள் நடத்தும் தேர்வுகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது அதற்கான விண்ணப்பங்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும். ஆனால், ஆன்-லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ள முறையில் தமிழ்-ஆங்கிலம் என இரண்டு மொழிகளும் இடம்பெற்றுள்ளது. தமிழில் இருப்பதால் கிராமப்புறத்தில் உள்ளவர்களும் எளிதாகப் படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். இப்போது சிறிய அளவிலான தேர்வுகள் ஆன்-லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோன்று, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளையும் ஆன்-லைனிலேயே நடத்தினால் விண்ணப்பிக்கும் முறைகள் எளிதாகும் என தேர்வர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். Read more...

